பக்கங்கள்

வியாழன், 13 ஜனவரி, 2011

நாலு நாளும் பொங்கல் நன்மை என்றும் தங்க சீரும் சிறப்பாய் வாழ்த்தி சேர்வோம் சேர்வோம் வாருங்கள் !

பழையது குப்பைகள்
பனியையும் விரட்டியே
குளிரையும் நெருப்போடு
கொளுத்தி நாம் போட்டுதான்

சாமியென  சாணி கொண்டு
சடங்கென அருகம் புல் செருகி
அதிகாலை சூரியன் வந்து
அன்புடனே காய வைக்கும்

எறும்புக்கும் கோலமிட்டு
இப்பூமிக்கு பூவைத்து
கரும்புக்கு வெட்டி வைத்து
கனிகளையும் கொட்டி வைப்போம்

புத்தரிசி புதுப்பானை
பொங்கிவரும் புது பாலும்
இட்டுவைத்து ஏலமென
எட்டுத்திக்கும் மணக்க வைப்போம்

ஆவாரம் பூபறித்து
அழகான மாலை கட்டி
கழுத்திலிடும் காளைக்கும்
கனிவுமிக்க பசுக்களுக்கும்

குதித்து வரும் கன்றுக்கும்
கும்பிடுவோம் பொங்கலிட்டு
மதித்திடுவோம் மண்ணில் உள்ள
மற்ற உயிர்களையும் வழிபடுவோம்

பூதைத்து சடையெல்லாம்
புன்னகைத்த முகத்தெல்லாம்
வாழ்க்கைக்காக சாதித்ததை
வட்டமாக கும்மியடித்து

உரியடிக்கும் சிறுவர் கூட்டம்
ஓடிபிடிக்கும் வெற்றி கூட்டம்
மாடு பிடிக்கும் வீரர் கூட்டம்
மணமுடிக்கும் பெண்கள் கூட்டம்

நான்குநாளும் களித்திடவே
நான் காணும் பொங்கலிலே
இனிப்போடு என்றென்றும்
இன்பமோடு வாழட்டும்

கருத்துகள் இல்லை: