பக்கங்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

புயாவின்* பிரிவு


கண்விழிக்காமல் தூக்கிவந்து
கதகதப்பாய் கோணியிட்டு
பசும்பாலை வயிறு முட்ட
பருக வைத்தேன் நீ வளர

கண்விழித்தால் முதல் தாயாய்
கண்டு வைத்தாய் என்னை மட்டும்
காலோடு தோள் ஏறி ஏணியாய்
காதோடு சேட்டை செய்தாய்

நாற்பது நாளில் விளையாடினாய்
நாங்கள் மறைந்தால் குரைத்து அழுதாய்
வெளிபட்டால் விரட்டி வந்தாய்
வீட்டு காவலில் மிரட்டி வைத்தாய்

எலி வலைகள் மோப்பமிட்டாய்
எதிரி தலைகள் விழ  குழி பறித்தாய்
மணி கட்டியே மாட்டை முடிக்கினாய்
மாமிசம் என்றே எத்தனை அடக்கினாய்

முள்ளு வேலியாய் காத்திருந்தாய்
எள்ளு சங்காயம் பொறுக்கிவந்தாய்
வேலை அத்தனைக்கும் போட்டி போட்டாய்
வினோத பாசத்தில் வெற்றி பெற்றாய்

பாம்பு ஒன்றை பார்த்துவிட்டாய்
பதறி பதறி ஊரை கூட்டினாய்
கம்பு கொண்டு அதை அடித்த ஊரார்கள்
கைதட்டினர் உன் கருணை கண்களுக்கு

சந்தைக்கு செல்ல ஊருக்கு போனேன்
சந்தடியில்லாமல் பின் தொடர்ந்தாய்
தெரு நாயெல்லாம் உன்னை விரட்டியே
தேட வைத்தன தன் உயிரையே

அத்துணை முறையும் வென்றுவிட்டாய்
அடங்கா பசிக்கு நான் தோற்று விட்டேன்
வாயும் நுரையுமாய் வழியில் நின்றாய்
வழி தவறி நானோ எங்கோ சென்றேன்

*புயா( பிறமொழிச்சொல் ): முதலை,
இங்கு செல்ல நாய் குட்டி  பெயரில்

கருத்துகள் இல்லை: