பக்கங்கள்

வியாழன், 9 டிசம்பர், 2010

சாமி கிடா ?

அம்மா என்னை ஆடு மேய்க்க
அனுப்பிவைத்தால் இன்றுமட்டும்
சொந்தம் ஒன்று செத்திருக்க
சோகம் என்று அவள் போயிருக்க
ஊரைவிட்டு நெடுந்தொலைவில்
உயரமான சவுக்கு தோப்பில்
தன்னந்தனியாய் தவித்தேன் ஆடுபோல்
தத்தளிக்கும் ஆட்டு குட்டி போல்

வெட்ட வெளியில் கட்டாந்தரையில்
விண் மட்டும் மானம் காக்க
வெள்ளாடு கால் நீட்டி விழுந்திருந்தது
வெடிக்கும் , இடிக்கும் தன் குரலோடு
வேதனை சொல்லி வைக்க
பனி குடமும் பல சொட்டு இரத்தமுமாய்
பரவசமாய் பெற்றது குட்டிகள்

தொப்புள் கோடி வெளியில் வர
தொடர முடியா மூச்சினாலே
பனிக்குடத்தில் செத்திடாமல்
பாலுக்கும் மூச்சுக்கும் சத்திடாமல்
ஆட்டுக்குட்டி துடிதுடிக்க
ஐந்தறிவு எனக்கு ஆறறிவாய் மாற
ஆசையோடு பனிக்குடத்தில் கைவைத்தேன்

பிசுபிசுவென கொழகொழத்து
மொசுமொசுவென முடி வளர்த்து
மூடிவைத்த உயிர் யுடலை
முழுவதுமாய் வெளிக்கொணர
கைவைத்து அகற்றி விட்டேன்
கர்ப்பபையின்  அமிர்தத்தை
கர்வம் எனக்கு வந்திட்டது

கால்களை நேர் நீட்டி
கால் குளம்பை நகத்தால் வெட்டி
முகம் முழுவதும் வழித்துவிட்டு
மூச்சு விட நான் வழி செய்து
நிற்க வைத்து பால் கொடுக்க
நினைத்த நானோ யோசித்தேன்
கொட்டாவி விடும்வரையில் தாய் குட்டியை ஈனுமே

பனி குடத்தை தின்றுதான்
பசிபோக்கும் தாய்மையை
பூனை போன்று குட்டி போட்டு
பொறுக்கா பசிக்கு தின்னாமலே
இன்னொரு குட்டியை அது ஈன
இந்த குட்டியை பரிசோதித்தேன்
ஆண் குட்டி தலை குட்டி

கொஞ்சம் நேரம் பொறுத்திருந்து
குட்டியை முன்போல் அறிந்திருந்து
தலை குட்டியை தூக்கிவைத்து
தாயுடனே சீம்பால் ஊட்டவைத்து
தொண்டை இரண்டுக்கும் காய்ந்திடாமல்
தொடர்ந்து இரண்டுக்கும் ஊட்டவைத்தேன்
நான் தன்னந்தனியாய் பனிரெண்டு வயதில்

இரண்டாம் நாள் என்னிடம்
இரண்டு குட்டியும் துள்ளியது
துக்க நாளை படைத்து விட்டு
துரிதமாக வந்த என் தாயோ
எந்தன் சமர்த்தை பார்த்துவிட்டு
என் ஆட்டிலே பால் கறந்து
காந்தி பாலாம் காய்ச்சி தந்தாள்

கடுமையாக முறைத்து பார்த்தேன்
கடைசி முறையென எச்சரித்தேன்
உறுப்புகொடி போட்டமுதல்
உணவருந்தா ஆட்டை பார்த்து
பெருமருந்து கொடியினை
பிடுங்கி வந்து நான் போட்டு
என் தாயும் ஆட்டு தாயே ...

குட்டி போல்தான் நான் கூட
கோபம் கொண்டதும் நியாயமோ
மூன்றாம் நாளோ மேட்டு மீதும்
முட்ட வந்தது என்னிடமும்
சில நேரம் என் விரலை
சீம்பால் என சூப்பியது
பல்லிலா அதன் வாய்க்கு
பரம சுகமாய் தித்திததாம்

எந்த நாளும் அது குளிக்க வில்லை
இருந்தாலும் அதன் உடல் நாறவில்லை
மனிதன் போல் அது உழைக்கவில்லை
மறந்தும் உழைப்பை அது பழிக்கவில்லை
புல் பூண்டை தின்று வைத்து
பொறுமையாக அசைபோட்டு
தன்னுடலை பெருக்க வைத்தது

தடவி முட்டி தூக்கி வைத்து
தழுவும் பொன்னுடலை பரிசித்து
எத்துனை முத்தம் கொடுத்திருப்பேன்
என்னுடைய இரண்டு ஆட்டு குட்டிக்கும்
முப்பது நாளில் கயிறு கட்டி
முட்டி போட்டு மேய வைத்து
காயை கூட அடித்து வைத்தார்
காலம் விரைந்து ஓடியது


கார்த்திகை மாதத்தில் காய்ச்சலோடு
கடுமையாய் வந்தது மஞ்சள் காமாலை
சித்த மருத்துவம் செய்து பார்த்தும்
சிறிதும் குறையவில்லை நோயின் தாக்கம்
அலோபதி வைத்தியத்தில் அதிகம் செலவழித்து
அப்பாவின் கடன் போல் நோயும் வளர்ந்தது
அம்மா மட்டுமே குல தெய்வத்திற்கு
ஆட்டு கிடா  பலி கொடுக்க வேண்டிக்கொண்டாள்
மஞ்சள் காமாலை எனக்கு குறைந்திட்டதாம்

சித்திரை மாதம் வந்தவுடன் சேதி
சித்திக்கும் சொந்ததிற்க்கும் சொல்லியனுப்பி
பூசாரி கிழவனுக்கு பாக்கு வைத்து
புது வேட்டி சட்டையும் எடுத்து வைத்து
மல்லிபூ மாலையில் அலங்கரித்து
மறு கையில் அரிவாளை ஆதரித்து
ஆட்டு கிடா அதை ஓட்டிவந்தார்

அவசரத்தில் அதை பலியிட்டார்
அறுசுவையென படைத்தும் விட்டார்
பாட்டில்கள் எடுத்து வந்தால் பாவம் வரும்
பதுக்கி வைத்திருந்தார் நாட்டு சாராயம்
போதை ஏற்றி சொந்தம் போயும் விட்டார்
புரியா நானும் கிடா கறி உண்டேன்
முடிந்து விட்டதாம் சாமியின் நேர்த்தி

மறுநாள் முழுதும் வயிற்று போக்கு
மரணம் ஆகிவிட்டார் ஒரு சொந்தம்
காரணம் ஆனது சாமி குத்தம்
காயை அடித்த கிடாவை வெட்டியதால்
எனக்கும் ஒன்றும் ஆகவில்லை
இன்னும் பலருக்கும் இப்படியே
ஆனாலும் சொந்தம் இதை நம்பவில்லை

என் ஆத்தா சாமியை நிந்தித்தால்
இனி ஆயுளுக்கும் கிடாவை வெட்ட மாட்டேன்
தப்பை திருத்தித்தான் தண்டிக்கவில்லை
தவிக்க வைத்ததாம் சாமி குத்தமாம்
மருத்துவ கல்வியை நான் படிக்கையில்
மறந்து போன இந்த பழம் நினைவு
எட்டி பார்க்குது சாராய குத்தமென்று
இருந்தாலும் சாமியை  நம்பனுமோ தெரியலையே ?

கருத்துகள் இல்லை: