பக்கங்கள்

திங்கள், 20 டிசம்பர், 2010

வெள்ளைக்காரன் அம்மாவென்று !

கல்லறை கடைசியாய் மூடிக்கொள்ள
கலங்குது கண்களில் கண்ணீர் மெல்ல
அழுததின் அர்த்தங்கள் அவிழும்போழுது
அலாஸ்காவே* அலறுது அழிவில் கொள்ள
"இயாக்கின்"* மொழி இன்று இறுதி கூட
இறக்கும்போது மேரி ஸ்மித் ஜோன்ஸோடு*
அன்றுவரை இருந்துவந்த  அம்மொழியோ
அய்யய்யோ அய்யய்யோ  முடிந்து போனதே !

"கரைம்"* மொழி கலந்து விட்ட உயிர் மூச்சில்
காயத்தால் இதயம் மெல்ல இழந்து கொண்டு
ஆறு பேர் பேசிக்கொள்ளும் அவலத்தை
ஐந்தறிவு விலங்கு கூட புரிந்து கொண்டு
மனிதனால் இழந்து கொள்ளும் மொழியைபோல
மாற்றங்கள் வந்திடுமோ நம் மொழியில்
பேசியது பேர் ஆசையல்ல  அசையில்தான்
பிறகென்ன நமக்கெல்லாம் அசிங்கம்தான்

பத்து பேர் பிரிந்திருந்தும் பார்த்துகொண்டார்
பழம் மொழியாம் "விசிடா"* வின் விபரீதத்தை
அமெரிக்கா செவ்வாயிலே குடியேறி
அங்குள்ள மொழியெல்லாம் கற்று கொள்ள
நாசாவிலே* ஆராய்ச்சியை நடத்திவந்தாலும்
நன்றாயில்லை ஒக்லஹாமா* மாகணத்தில்
ஏனிந்த அவலமெல்லாம் விக்கிலீக்கில் *
இல்லாததையா சொல்லிவிட்டேன் மன்னியுங்கள்

கோவையிலே செம்மொழியோ குலாவியிருக்க  
கூட்டமெல்லாம் பந்திக்கென முந்தியிருக்க
செம்மொழியை சிண்டு பிடிக்க சிலர்மட்டும்
சீரழியும் திரைவரியில் தள்ளுபடியாய்
ஊழல் நிதியில் பொன்னாடை போர்த்துகின்றார்
உயர் மொழியாம் தமிழ் மொழியை வாழ்த்துகின்றோம்
இந்தியாவில் பேசப்படும்  196 மொழிகள்
இருக்கின்றதாம் அழிவினில் ஐ.நா இதைச்சொல்ல

பொறுக்கவில்லை என் மனம்தான் புயலாய் மெல்ல
புரட்டி போட்டு உயிரைத்தான் உலுக்கி கொள்ள
வழியில்லையே இலங்கையிலே அழிந்துபோன
வாழ்க்கையில்லையே தமிழுக்கென தெரிந்துகொண்டேன்
இதைபோன்றே எம்மொழியோ அழிந்துபோகும்
என் செய்வேன் என் செய்வேன் வழியென்னவோ?
உயிரைவிட்ட தமிழுக்காய் வீரமாமுனி போன்றே
ஒரு வெள்ளைக்காரன் உயிருடன் இருந்தால் எம் மொழி காப்பான்

 * பிறமொழிச் சொல்
குறிப்பு  : தினமலர் பொது அறிவை மையமாக வைத்து புனையப்பட்டது

கருத்துகள் இல்லை: