பக்கங்கள்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

துரத்தி வருகுது கண்ணாமூச்சி இன்றும் தோழி !

சனி கிழமை தனித்திருந்தேன்
சாகசம் செய்வதற்கு துடித்திருந்தேன்
செங்கல்லை தேய்த்து மெழுகி
செல்லும் சாலையில் சாம்பலை தூவி
சக்கரமில்ல போக்குவரத்தை
சற்றும் நிறுத்தாமல் நடத்திவந்தேன்
தேங்காய் நாரை பிரித்து புனைந்து
தேடிவரும் குருவிக்கூடாய்
பாடி வரும் புது கனவுகள் அதில்
பறந்து போகாமல்  முட்டையிடும்
மண் சோறை சூடாய் ஆக்கி
மனதின் வாயினால் மென்று தின்று
தண்ணீரின் மண்ணை நிறைய
தலை கீழாய்  கவிழ்த்து கழுவி
சின்ன பாத்திகள் கீறி வைத்து
சிறிய புற்களை பிடுங்கி நட்டு
விவசாய வேலையும் சோம்பலில்லாமல்
விற்பனை மண் குவிய கடையிலும் தூக்கமில்லாமல்
கொட்டாவி விடும் குட்டி வயதில்
குலுங்கி வந்தாய் தனிமையை விரட்ட
பக்கத்து வீட்டு மகாராணியாய்
பகட்டே இல்லாத என்னுடைய தோழியாய்
வந்தவுடனே வாயடைத்து நின்றாய் என்
வல்லைமை திறமையை போற்றி நின்றாய்
மண் சாலையில் ஒரு குச்சியை புதைத்து
மறைத்து வைத்து விளையாட சொன்னாய்
எடுக்க முடியாமல் இருந்து விட்டால்
என் கண்ணை கட்டி விளையாட சொன்னாய்
கண்ணா மூச்சி விளையாட்டை நாமும்
கண்டு பிடித்தவனை காணமல் தேடி
அன்று முழுவதும் விளையாடி விட்டு
அழுக்கான சட்டையுடன் வீட்டிற்கு சென்று
அடிதடிகள் கொஞ்சம் வாங்கி
அழுது கொண்டு தூங்கியும் போனோம்
மறுநாள் விளையாட்டை தொடர
மண் மாளிகை கட்டிவைத்து
உன்னிடம் காட்ட ஓடோடி வந்தால்
ஓலை புது வீட்டில் உட்கார வைத்து
உனக்காக சடங்குகள் செய்தார்
ஒளிந்திருந்து பார்த்த என்னை
உன்னுடைய கண்கள் விரட்டி பிடிக்க
வெட்கப்பட்டு ஓடோடி மறைந்தேன் இன்றும்
விரட்டி வருகிறது பழம் நினைவுகள்

கருத்துகள் இல்லை: