பக்கங்கள்

வியாழன், 2 டிசம்பர், 2010

பாசி படித்துறை நண்பனே

விரால் பிடிக்க தூண்டில் போட்டோம்
விடிவதற்குள் சென்று பார்த்தோம்
தூண்டில் அங்கு காணவில்லை
தொலைவில் எங்கும் அது தெரியவில்லை

நண்பா நமக்கு தோல்வியாச்சு
நம்ப தூண்டில் மாயமாச்சு
இன்னொரு மீன் பிடிப்பதற்கு
எனக்கும் உனக்கும் ஆசையாச்சு

மீன் பிடித்தால் தரித்திரம் என்று
மீசை சித்தப்பா நமை  அடித்த போது - நாம்
வெட்டிய குழிநீரில் விட்டு விளையாடுவதற்கு
விராலின் மீதுதான் ஆசையாச்சு

வீட்டுக்கு சென்று சாப்பிட்டு விட்டு
வேறொரு தூண்டிலோடு வருகிறேன்
கால்கள் உனக்கு பேருந்தாய் மாற
கைகள் உனது ஓட்டி சென்றது

அங்கு மட்டும் நான் தனியாக அமர்ந்து
 அழுது கொண்டே ஆழ குளத்தினை பார்த்தேன்
நண்பா நம்  தூண்டில் இழுத்து கொண்டு
நடு ஆழத்துக்கு விரால்  மீன் செல்வதை கண்டேன்

கால் சட்டை கழட்டி கல் ஒன்று வைத்தேன்
கரணம் அடித்து தண்ணீரில் குதித்தேன்
தூண்டிலின் தக்கையை துழாவி பிடித்து
துறு துறு வென இழுத்துவந்தேன்

பாய்ந்து படியேறி பார்க்கின்ற போது
பாம்பு ஒன்று பெரிதாக மாட்டிகொண்டிருந்தது
பச்சை காட்டாமணகால் அடித்து கொன்றேன்
பாம்பு விழுங்கிய முள்ளை எடுக்க நினைத்தேன்

சாலையின் ஓரமாக படுக்கவைத்து
சற்று நெளிவது போன்றே செடியில்
தலையை மறைத்து வைத்தேன் ஊர் எல்லையில்
தண்ணீர் பாம்பு என்று தெரியாதிருக்க

பேருந்து சென்றால் நசுக்கி விடும்
பிறகு நாம்தான் முள் எடுக்கலாம்
கணக்கு ஒன்று கண்டு வைத்தேன்
காட்சி வேறாய் மாறி போனது

ஊருக்கு புதுசாய் வந்தவன் ஒருவன்
ஓட்டிவந்தான் இருமாட்டை கையோடு
தண்ணீர் பாம்பை கண்ட மாடுகள்
தலை தெரிக்கவே மிரண்டுதான் போயின

ஓட்டம் பிடித்தன ஊரைவிட்டு ஓடின
ஓட்டிவந்தவன் கீழ்விழுந்து எழுந்தான்
உற்று பார்த்தான் செத்த பாம்பைதான்
ஒருவழியாக தன்னை தேற்றினான்

போட்டு வைத்தவனை 'பொறம்போக்கு' ஏசினான்
போடா நீதான் மனதிற்குள் ஏசினேன்
மாட்டை பிடிபதற்க்கு மான் வேகம் ஓடினான்
மறைந்திருந்த நானோ வீரனாக வந்திட்டேன்

மாட்டை பிடித்துதான் அவன் பெயர்
மகராசன் மீண்டும் வந்திட்டான்
மறைந்து கொள்வதற்காய் மறுபடியும் ஓடினேன் 
மரத்தின் பின் நின்று மனகிளர்ச்சி கொண்டிட்டேன் 

இரண்டு மாட்டையும் சேர்த்து பிணைத்திட்டான் 
எதிரில் இருக்கும் வேரடியில் இழுத்து கட்டினான் 
நாற்றமடிக்கும் வயிற்றை பிடுங்கும் நடந்து செல்வோருக்கு 
நல்லது செய்வேன் என்று பாம்பை அவன் தூக்கிட்டான் 

செட்டிகுட்டையின் சூரை முள் புதரில் 
சென்று அவன் வீசிட்டான் பாழடைந்த கிணற்றில் 
பதறி நான் போனேன் பதுக்கி இருந்தே 
பயித்தியம் பிடிக்குமென வேறோர் வழியில் சென்றேன் 

இடையில் இருந்த பனைமரத்தை பார்த்திட்டேன் 
எனது தலையினில் மெல்ல நான் கை வைத்தேன் 
வலிக்கும் பஞ்சை நான் வருடியும் பார்த்தேன் 
வடிந்த இரத்தத்தை கொஞ்சம் நான் யோசித்தேன் 

பனைங்கொட்டை பொறுக்கி பந்தை நாம் அடித்தோம் 
பார்த்த மட்டைபந்தில் சச்சினாய் நடித்தோம் நீ 
அடித்த பந்து ஆறுக்கு பறக்காமல் நேற்று 
ஆவேசமாக என் மண்டையை பிளந்தது 

ஆவென்று அலறி துடித்தேன், ஆருயுர் நண்பனே 
ஆபத்தை உணர்ந்திட்டாய், ஆடை அவிழும் கையென  விரைந்தாய்
கோரை பிடுங்கி நீ கொட்டும் என் இரத்தத்தில் நான் 
கோபப்படுவேன் என்று நீ அழுது அதன் சாற்றை ஊற்றினாய் 


வேறு வழியில்லாமல் வீட்டிற்கு சென்றேன்
விளக்கமாக அம்மாவிடம் சொன்னேன்
திருட்டு மாங்காய் அடிக்க வந்தவன்
தெரியாமல்தானே என் மண்டையை உடைத்தான்

தப்பு செய்தது நாங்கள்தான் என்றாலும்
தகப்பனிடம் சீக்கிரம் வரச்சொல்லி அனுப்பினால்
எங்கப்பன் என் விளக்கத்தை நம்ப மறுத்தாலும்
என்னை அழைத்து மருத்துவனிடம் சென்றார்

அன்று மாலை நீதான் வந்தாய்
அழுது அழுது உன் கண்கள் வீங்கியே
உன்னுடைய கைகளில் உரிக்காத ஆரஞ்சு
உரிக்க கொடுக்க வாய்த்த தப்பிலாத நட்பு பிஞ்சு

அன்று இரவே மீன் பிடிக்க நினைத்தோம்
அடுத்த நாள் விடுமுறைக்கு நான் விளையாடலாம்
அழைத்தாய்
ஆயிரம் குஞ்சுக்குமேல் ஆணும் பெண்ணுமாய்
அடர்த்தியான தாமரையில் உலங்கு வானூர்தியாய்

ஏரியில் இருந்த விராலை பிடித்து வந்து
எங்கள் தங்க சுரங்க கேணியில் வளர்க்கலாம் என்று
தெற்குதெரு மின் விளக்கில் தெரிந்து கொண்டு
தெரியாமல் போட்டு வைத்தோம் தூண்டில் ஒன்று
...............            .......................           ........................
சூறை முள் புதரில் தேடிபார்த்தேன்
சுத்தமாய் அங்கு பாம்புமில்லை
அடி ஆழத்திற்கு அது சென்றிருக்கும்
ஆற்றாமையினால் வருந்துகின்றேன்

நண்பா நீயோ உன் அம்மாவிடம்
நான்தான் மண்டையை உடைத்தேனென
ஐம்பது பைசா காசு வாங்கி அருமை நண்பன் எனக்கு
அதற்கான மருந்தென தூண்டில் வாங்கி ..........


பாம்பு கிடந்த சாலையில் பார்த்தேன்
பாதி மண்ணில் ஐம்பது காசு கிடந்தது
அவன் விழுந்து எழும்போது அந்த காசு
அவன் அறியாமல் விழுந்திருக்கும்

கீழே கிடந்த ஐம்பது காசுக்கு
கெண்டைமீனின் தூண்டில் வாங்கி
படித்துறையில் நான் போடும்போது
பதுங்கி வந்து என்னை மிரள வைத்தாய்

என் கையில் ஐம்பது பைசாவை கொடுத்து
இன்னொரு தூண்டில் வாங்கி வரச்சொன்னாய்
நான் கையில் வைத்திருந்த தூண்டிலை வாங்கி
நடு தண்ணீரில் போட நீ முயற்சி செய்கையில்

பாசி உன்னை வழுக்கியது
படித்துறை உன்னை தள்ளியது
மூங்கில் ஊறவைத்த கட்டைக்கு
மூழ்கி விழுந்துவிட்டாய் என் செய்வேன்

பத்து  வினாடிகள் சென்றிருக்கும்
பருத்த விரால் மீன்  நீ விழுந்த இடத்தில்
பக்கத்தில் வந்து சென்றதே
தண்ணீர் எல்லாம் சிவப்பாய் மாறி

தத்தளிக்கும் உன்னிடம் சூழ்ந்து கொள்ள
தண்ணீரில் நீயும் மூழ்கி போனாய்
தாவி  நான் தொண்டை  கிழிய கத்தினேன்
தாமதம் இல்லாமல் வந்து சேர்ந்தனர் கூட்டம்

உன்னை அவர்கள் தூக்கும் போது
உதிரம் ஒழுக கரையில் போட்டார்
உயிர் நிலையில் மூங்கில் குத்தியதால்
உயிரைவிட்டு என்னை விட்டு இறந்து போனாய்


இறந்த பிரிவு ஆறுவதற்குள்ளே
இடியாய் என் மேல் பழியும் வந்தது
மண்டையை நீ என்னை உடைத்து விட்டதால்
மனதில் வெறி கொண்டு தள்ளி விட்டேனாம்

இறக்க வைத்ததும் என்னுடன் கொண்ட நட்பால்
என்னருமை நண்பனே எழுந்து வந்து சொல்லேன்
உன்னால் எப்படி உண்மையை சொல்ல முடியும்
உறுத்தி இருக்கலாம் உன்தாயின் புலம்பல்

தூளி கட்டியே தூக்கி போனார்
தொங்கும் சோகத்தை ஆட்டி நீ போனாய்
உன்னை புதையலாய் புதைத்து விட்டார்
ஓடி வந்து விட்டேன் அலிபாபா போலே

என்னை இழுத்து என் தாய் சென்றாள்
என்னிடம் சொன்னால் நீ பிடித்து கொள்வாய்
ஆனாலும் நண்பனே அன்று முதல்
அவதி பட்டேனே நீ பிடிக்க வில்லையே

சுடுகாடு வந்து செல்லும் தென்றலும் சுட்டது
சோகத்தோடு வந்து செல்லும் என்னிடம் கேட்டது
சுத்த நட்பு எப்படித்தான் செத்து போனது தெரியல
சொர்க்கம் செல்லும் நரகத்திலே சுவடும் யாருக்கும் புரியல .........................







கருத்துகள் இல்லை: